காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவானே, டிராபிக்கில் மாட்டிக்கிட்டானா...? செல் அடிச்சாலும் ரிங் போயிட்டே இருக்கே" அனிதா கவலை அடைந்தாள்......
காட்சி 3 : மணி 6.30. ஒரு விளம்பர நிறுவனத்தின் ஸ்டுடியோ.... "எங்கேய்யா போனான் அந்த கிருஷ்ணா.... குடுத்த வேலைய முடிக்காம எப்போ பாத்தாலும் 5 மணிக்கே ஆட்டிக்கிட்டு கெளம்பிடுறான்.... வேலைய முடிச்சிக் கொடுத்துட்டுப் போய்யான்னு சொன்னா ஆறேகாலுக்கு எல்லாம் திரும்பி வந்துடரேன் சார்னு சொல்லிட்டு ஓடிட்டான்..... எம்.டி. கிட்டே போட்டுக் குடுத்துட வேண்டியது தான்"..... கிருஷ்ணா விஷுவலைசராக வேலை பார்க்கும் விளம்பர நிறுவனத்தின் ஸ்டுடியோ மேனேஜர் கத்திக் கொண்டிருந்தார்.... அவருக்கு தெரியும் பையன் யாரையோ காதலித்துக் கொண்டிருக்கிறான்.... அதனால் தான் சரியாக 5 மணிக்கெல்லாம் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறான் என்று.... சின்ன வயதில் இவரை யாருமே காதலித்ததில்லை.... அந்தக் கடுப்பில் உலகில் எவனுமே காதலிக்கக் கூடாது என்று மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.... இவரோட சங்கல்பம் உலகத்துக்கு புரியணுமே?
காட்சி 4 : மணி 7.30. இந்தியன் டீ ஸ்டாலில் அரட்டை களைகட்டத் தொடங்கி இருந்தது.... "மச்சான்.... கிருஷ்ணா எங்கேடா காணோம்.... இன்னைக்கு நைட் ஷோ சூப்பர்மேன் போலாம்னு சொன்னான்.... செல் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்கிறான்.... ஆபிஸ்ல என்னத்தைதான் 24 மணி நேரமும் புடுங்கிக்கிட்டு இருக்கானோ" கல்யாணம் புலம்பினான்.... கல்யாணம், கிருஷ்ணா, ஜோசப், சம்சுதீன் நால்வரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.... தினமும் சரியாக 7.30 முதல் 10.00 மணி வரை ஒன்றாகவே இவர்களைப் பார்க்கலாம்.... இந்தியன் டீ ஸ்டால் தான் இவர்களது மீட்டிங் பாயிண்ட்....
காட்சி 5 : மணி 8.30. பாபு டென்ஷனாக இருந்தார்... அவரது தங்கை மகன் தான் கிருஷ்ணா... இவர் அனிதாவின் அப்பாவும் கூட.... வேலைக்குப் போன தன் மகள் இன்னமும் வரவில்லை.... "அந்த கிருஷ்ணா பய கூட தான் பேசிக்கிட்டு இருப்பா.... வயசுப் பொண்ணு நேரம் காலம் இல்லாம வீட்டுக்கு வர்றா... போர்றா... இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுட வேண்டியது தான்.... சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்.... ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிடப் போகுது...." வருத்தத்துடன் நினைத்துக் கொண்டிருந்தபோதே அனிதா உள்ளே வந்து கொண்டிருந்தாள்... முகம் வாட்டமாக இருந்தது....
காட்சி 6 : மணி 9.00. சுசிலா சமைத்துக் கொண்டிருந்தார்.... "இந்த கிருஷ்ணா பய ஆபிஸ் விட்டா வீட்டுக்கு நேரா வர மாட்டானே? கண்ட தடிப்பசங்களோட சுத்திட்டு 10 மணிக்கு மேல தான் வருவான்... வந்து நேரத்துக்கு சாப்பிட்டுட்டாவது ஊர் சுத்தப் போலாமே? அந்த அனிதாப் பொண்ணு வந்து தான் இவனை அடக்கணும்.... அவ தான் இவனுக்கு சரியா தண்ணி காட்டுவா" தன் வருங்கால மருமகளும் மற்றும் அண்ணன் மகளுமான அனிதாவை நினைத்துக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தார்....
காட்சி 7 : மணி 9.30. "என்னய்யா Formality எல்லாம் முடிஞ்சுதா.... அந்த லாரி நெம்பர் யாராவது நோட் பண்ணாங்களான்னு வெசாரிச்சியா.... அவன் பாக்கெட்டுலே இருந்த அட்ரசை வெச்சி தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணு.... நாளைக்கு காலைலே தான் முடியுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு" செல்லில் பேசிக்கொண்டிருந்தார் எஸ்.ஐ. துரை....
காட்சி 8 : மணி 10.00. "இன்னமும் இந்த தறுதலைப் பயலைக் காணம்.... அவன் ஆத்தாக்காரி கொடுக்குற செல்லம் தான் இவனுக்கு.... முதல்ல இவளை நல்லா நாலு சாத்து சாத்துனா தான் அவன் திருந்துவான்" லஷ்மிபதி மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார் தன் தறுதலை மகனை எதிர்பார்த்து....
காட்சி 9 : மணி 10.30. நாய் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது... எப்பொதும் நன்றியுணர்ச்சிக்காக தன் வாலை மெதுவாக ஆட்டும் நாய்.... அப்போது ஏனோ கொஞ்சம் கோபமாக வாலை ஆட்டிக் கொண்டிருந்தது... சரியாக 10.00 மணிக்கு தெருநாய் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் தனக்கு உணவு வைக்கும் கிருஷ்ணா அன்று ஏனோ காணவில்லை..... வரட்டும்... அவனைப் பார்த்து நாலு குரை குரைக்கலாம்....
காட்சி 1 : மணி 5.10. காதலி மற்றும் வருங்கால மனைவியைப் பார்த்துப் பேச ஹீரோ கிருஷ்ணா ஹீரோ ஹோண்டாவில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.... கண்களில் எப்போதும் கனவுகள்.... வீட்டுக்கு ஒரே பையன்.... நடுத்தரக் குடும்பம்.... ஓரளவு படித்து நல்ல வேலைக்கு வந்ததால் பொருளாதரத் தன்னிறைவு.... தங்கையையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தாயிற்று.... ப்ரெண்ட்ஸ், குடும்பம், காதலி என்று நிறைவான வாழ்வு.... அடுத்த வீக்-எண்டுக்கு அனிதாவை மகாபலிபுரம் கூட்டிக்கிட்டு போகணும்.... வர்றப்போ மாயாஜால்லே பாரிஜாதம் பார்க்கணும்.... யோசித்துக்கொண்டே லேன் தாண்டி அசுர வேகத்தில் ஓட்டிய கிருஷ்ணாவை பின்னால் இருந்து வந்த லாரி முத்தமிட்டது..... காலால் உதைக்கப்பட்ட கால்பந்தைப் போல தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணா உடல் மீது அதே லாரி ஏறிச் சென்றது..... கிருஷ்ணாவின் உயிர், கனவுகளோடு பயணமானது அண்டவெளிகளைத் தாண்டி......
No comments:
Post a Comment